Translate

Monday, 1 February 2016

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!''

'ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!''

சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்

லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற  இயக்கம்.
 இந்த அமைப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ விழாவில் பேசும்போது, ''ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், கேஸ் இணைப்பு, மின் இணைப்பு, பட்டா மாற்றம், கல்விக் கடன் போன்ற அரசு சேவைகளை எப்படி லஞ்சம் தராமல் பெறுவது என்ற வழிகாட்டுதலை எங்கள் சேவை மையம் வழங்கும்!'' என்றார்.

அமைப்பின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ''தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் முறை, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் முகவரி மற்றும் தேவைப்படும் தொலைபேசி எண் போன்ற தகவல்களையும் இங்கே தருவோம். அனைத்து மக்களும் நல்லது தரும், நீதி தரும் நல்லாட்சி நாட்டில் மலர்ந்திட தொடங்கப்பட்டதுதான் இந்த இயக்கம். இது எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு போன் போதும். இப்போது நாங்கள் ஒரு தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தப் போகிறோம். அந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள். உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்'' என்று பேசி முடித்தார்.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொது சேவை எண் 7667100100. இதை சகாயம் ஐ.ஏ.எஸ். அறிமுகப்படுத்திப் பேசினார். 'இதுபோன்ற அமைப்புகளின் சேவை தமிழகத்துக்கு அவசியம் தேவை. இன்றைய தமிழகத்தில் லஞ்சம், ஊழலைக்கூட ஒழித்துவிடலாம். ஆனால், மதுவை ஒழிக்க முடியுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணியாற்றியபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். எனக்கோ எங்காவது சட்ட - ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விட்டதா... அல்லது எங்காவது கலவரமா என்ற பதற்றத்தில், 'சொல்லுங்க..’ என்றேன்.
'ஐயா... கலெக்டர் சார் பேசுறீங்களா?’
'ஆமாம்... சொல்லுங்க!’
'நான் உசிலம்பட்டியில் இருந்து பேசுறேன்’ என்று சொல்லவும், எனக்கு பதற்றம் மேலும் அதிகமானது. 'என்ன பிரச்னை சொல்லுங்க...’
'ரொம்ப முக்கியமான பிரச்னைங்க ஐயா...’
'என்னன்னு சொல்லுங்க...’ என்றேன் மேலும் பதற்றமாக.
'உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் இருக்குல்ல.. அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு டாஸ்மாக் கடை இருக்குதுல்லய்யா... அந்த டாஸ்மாக் கடையில விற்கும் ரம்ல ஒரு வாரமா கிக்கே இல்லைய்யா... அதுக்கு நீங்கதான் எதாவது செய்யணும்’ என்றார்.
ரம்மில் கிக் இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரை நள்ளிரவு 12 மணிக்கு அழைத்துப் பேசும் அளவுக்கு தமிழன் முன்னேறிவிட்டான்.
லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க வேண்டும் என்றால் அரசு அலுவலர்கள் முதல் மக்கள் வரை அத்தனை பேர் மனதிலும் மாற்றம் வரவேண்டும். நான் எந்த அலுவலகத்துக்கு மாறுதலாகிப் போனாலும் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற போர்டை அங்கே வைக்கச் சொல்வேன். தமிழகம் முழுவதும் எல்லா அலுவலகங்களிலுமே இந்த போர்டை வைக்கலாம். இன்றைக்கு ஊழல் செய்பவர்கள் வெகு வலிமையாக இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றால் துணிச்சலும், நேர்மையும் மட்டும் போதாது. மக்களுக்கு சட்ட அறிவும் மிகவும் அவசியம்.
இன்றைக்கும் ஒரு நெசவாளனின் தினக்கூலி வெறும் 75 ரூபாய்தான். ஆனால், அரசு அதிகாரிகளின் சம்பளம் இதைவிட பல மடங்கு அதிகம். எனவே, நெசவாளர்கள், விவசாயிகள் போன்றவர்களின் நலனுக்காக அரசு அதிகாரிகள் பலமடங்கு பாடுபட வேண்டும். அதிகாரிகள் ஊழல் மனநிலையில் இருந்து மாறி நேர்மையாக இருந்தால் சமூகம் மேம்படும். நாடு எழுச்சி பெறும்.
என்னை இதுவரை 21 முறை பணிமாற்றம் செய்துள்ளனர். எத்தனை முறை மாற்றினாலும் கவலைப்பட மாட்டேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித்தராமல் ஓயவும் மாட்டேன். ஒவ்வொரு முறை என்னை இடமாறுதல் செய்யும்போதும், என் நேர்மை கூடிக்கொண்டே போகிறது. எங்கெல்லாம் நேர்மைக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நான் இருப்பேன்' என்று கம்பீரமாக முடித்தார்.
'இனி கட்டப் பஞ்சாயத்துக்கு இடம் இல்லை... சட்டப் பஞ்சாயத்து சாதிக்கும்!’ என்பதே இந்த இயக்கத்தின் தாரக மந்திரம். அது நிஜமாகட்டும்!

No comments:

Post a Comment