Translate

Wednesday, 24 April 2013

மனம்


மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது. ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது. இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.



    ஓர் அறிவாய் இருக்கின்றபோது உணர்வை பெறுகிறது.
    ஈரறிவாய் இருக்கின்றபோது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.
    3வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.
    4வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.
    5வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,
    6வது அறிவாய் இருக்கின்றபோது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது. ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இதுதான் ஆறாவது அறிவு. இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது. ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும். மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான். ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது. இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான். ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத்தன்மையை அறியமுடியாமல் தவிக்கிறது.

மனதின் செயல் - மகிழ்ச்சி:

அனைத்து மக்களும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் அந்த சந்தோஷம் உலக பொருட்களில் இருப்பதாகவே எண்ணுகின்றனர். ஆனால் அந்த ஒரு பொருளானது, அந்த சந்தோஷத்தை சில நிமிடங்கள், சில மணி நேரம், சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் என இந்த வரையறைக்குள் தான் அது சந்தோஷத்தைக் கொடுக்க முடியும். ஆனால் உலகம் இப்படி பல பொருட்களை தன்னிடத்தே வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, போட்டியும், பொறாமையும், துன்பங்களையும், தீய எண்ணங்களையும் உண்டாக்கி இன்பமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு மரணத்தை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்கிறது.

இந்த உலக வாழ்க்கையில் ஒரு வீடு வாங்குவதும், ஒரு கார் வாங்குவதும் தான் நமக்கு தகுதி என்று எண்ணிக்கொண்டு படித்தவர்களும், படிக்காதவர்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் செயல் ஒரு மனிதனுக்கு உள்ள தகுதியை நிர்ணயிக்காது. ஆனால் போட்டியும், பொறாமையும், தீய எண்ணங்களுடனும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் போட்டியும், பொறாமையும், தீய எண்ணங்களும் இல்லாமல், இந்த உலக பொருட்களை வைத்துக்கொண்டு மிக மிக இன்பமாக வாழ நமக்கு ஓர் தகுதியான நிலையை நாம் நமக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த தகுதி எதுவென்றால் பிற பொருட்களின் மூலம் வரக்கூடிய எண்ணங்களை அலசி ஆராயக்கூடிய மனப்பக்குவம் தேவை.

இந்த மனப்பக்குவதிற்கு மருந்து எது என்றால் மனத்தை ஒருநிலைப் படுத்துவது. மருந்து என்று ஏன் கூறினேன் என்றால், பொதுவாகவே மருந்து என்றால் சிறிது கசப்புத் தன்மை உடையது தான். ஆனால் அது தான் நோயைத் தீர்க்கும். அது போல் உங்கள் மனமானது உலக விஷயங்களில் இருந்து மனதை பக்குவப்படுத்திக் கொள்வதினால் தான் , மனமானது ஒரு பொருளிலிருந்து ஏற்படக் கூடிய எண்ணங்களை அலசி ஆராய்ந்து, (அதாவது) அந்த பொருளினால் ஏற்படக்கூடிய இன்பங்கள், துன்பங்கள், போட்டிகள், பொறாமைகள் போன்ற நிலைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும். அப்போது தான் நமக்குள் இருக்கூடிய சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

அதாவது எப்படி என்றால் கோபம், பொறாமை, தீய எண்ணங்கள், துன்பம் இவற்றில் சந்தோஷத்தை கலப்பது. இந்த குணங்கள் இருந்தாலும் சந்தோஷமான மனநிலை ஏற்படும். போட்டியும், பொறாமையும் மனதில் இருந்தாலும் அதை உடனே நீக்குவதற்கு இந்த சந்தோஷம் உதவும். எந்த சந்தோஷம் என்றால் மனதை ஒருநிலைப் படுத்துவதால் ஏற்படக்கூடிய சந்தோஷம், (ஆனந்தம்). இந்நிலையில் இருந்தால் உலக வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஞான வாழ்க்கையை அடையலாம்

No comments:

Post a Comment